Sunday, 5 March 2017

தோழிதோழி


என் உன்னத தோழமையின் தேடலுக்கான விடை - உன் அறிமுகம்.


என் வாழ்வாகிய புத்தகத்தில், சுவையான பக்கங்கள் எழுதப்பட்டது – உன் வருகைக்குப் பின்னால்.


தினமும் என் முதல் அலைபேசி அழைப்பு உனக்குத்தான் என்று எனது உடலின் அணுக்களுக்குக் கூட தெரியும் போலும். ஏனெனில், நான் அறியாமலே எனது கைகள் அழைப்பை மேற்கொள்ள விளையும்.


என் நாமத்தை உச்சரித்ததில் நீ பிடத்ததோ இரண்டாமிடம் – என் அன்னைக்கு அடுத்தபடியாக.


என் வருங்கால கணவனிடம் கூடத் துணிவாகக் கூறுவேன், “தங்களைவிட பலமடங்கு என்னை நேசிப்பவள் இவ்வுலகில் ஒருவள் இருக்கிறாள்” என்று.


உனது மெய்சிலிர்க்க வைக்கும் அன்பைக் கண்டு, “முற்பிறவியில் என்ன உறவாக இருந்திருப்பாளோ?” என்ற கேள்விக்கு எனது உள்ளுணர்வு கூறிய பதில் ‘தோழி’. அன்றே உணர்ந்தேன் தோழமையின் மேன்மை அளவற்றதென்பதை.


தோழியே, இக்கவிதையை நான் உனக்காக எழுதிய தருணம், எனது இதயமானது கேள்வியொன்று கேட்டது. “கணம் கணம் உனக்காக துடிக்கும் என்னைப் பற்றி ஒருமுறையேனும் இதுபோன்ற கவிதை எழுதியுள்ளாயா?” என்று.


நான் கூறினேன், “அட! முட்டாள் இதயமே, நீ துடிக்க மறந்தாலும், என்னை மறக்க முற்படாத என் பிரியங்காவுக்காக எழுதுகிறேன்” என்று.


-ஷாலினி ஈஸ்வரமூர்த்தி

Thursday, 23 June 2016

இயந்திர உலகமடா!!!!!!


இயந்திர உலகமடா!!!!!!


என் சிறுவயதில்,
 

ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் நாங்கள் ஏங்குவது, அவ்வாண்டின் முழு ஆண்டு விடுமுறைக்காக.

ஏன் தெரியுமா?

முழு ஆண்டு விடுமுறையைக் கழிக்க நாங்கள் செல்வதோ, இயற்கை எழில் நிறைந்த எங்கள் அம்மாயி (அம்மாவின் அம்மா) வீட்டிற்க்கு.

ரம்யமான அவ்வீடு அமைந்ததோ பச்சைக் கம்பளத்தினிடையே.

மயில், குயில், காகம், குருவி, கோழி இவைகளின் சப்தங்களே எங்களைத் துயிலெழுப்பும் இசைகள்.

எண்ணெய் வைத்து, தலைவாரி, பூச்சூட்டி எங்களை விளையாட அணுப்புவாள் – என் அம்மாயி.

இவளுக்கு மொத்தம் எட்டு பெயரன் பெயர்த்திகள்.

நாங்கள் இணைந்து விளையாடிய விளையாட்டுகளை விரிவுரைக்கிறேன் கேளுங்கள்.

காகிதங்களின் வாயிலாக “திருடன் போலீஸ்” எனும் விளையாட்டு.

காடு முழுதும் அலைந்து திரிந்து, யார் நிறைய மயிலிறகுகள் சேகரிக்கிறார்கள் என்னும் “ஒப்பந்த”  விளையாட்டு.

சினிமாப் பாட்டுகள் பாடி, அப்பாட்டின் இறுதி எழுத்தினை முதல் எழுத்தாகக் கொண்ட, ஏதேனும் ஒரு பாட்டினை அடுத்தவர் பாடவேண்டும் என்ற “பாட்டுக்குப் பாட்டு” விளையாட்டு.

ஐந்து கற்களைச் சிதற விட்டு, “அச்சாங்கல்” என்னும் விளையாட்டு. நாளடைவில் கற்களின் எண்ணிக்கை அதிகரித்து “ஏழாங்கல்” என்று மாறிய கதை வேறு.

யாரேனும் ஒருவர் எங்களைக் கண்டு பிடிக்க, மற்றவரனைவரும் ஒழிந்து கொண்டு விளையாடிய “கண்ணாமூச்சி” விளையாட்டு.

யாரேனும் இருவர், எதிரெதிரே நின்று, உயர்த்திய கைகளை ஒருவருக்கொருவர் அனைத்து நிற்க, மூன்றாமவர், “ஒரு குடம் தண்ணீர் ஊற்றி ஒரே பூப்பூத்துதாம்” என்று பாடியபடி அவ்வுயர்த்திய கைகளின் வழியே நுழைந்து வெளியேறும் “ஒரு குடம் தண்ணீர்” விளையாட்டு.

காடுதோறும் அலைந்து பொறுக்கிய கற்களைக் கொண்டு கோவிலமைத்து, வேப்பம் குச்சி கொண்டு பந்தலிட்டு, தோட்டத்து வாழைப்பழம் கொண்டு பஞ்சாமிர்தம் செய்து, வீட்டு மக்கள் அனைவரையும் பூஜைக்கு அழைக்கும் விளையாட்டு. பெயர் சூட்டப்படாத விளையாட்டு.

தரையில் கோடிட்டு, தாயக்கட்டைகளை உருட்டி விட்டு, வீட்டில் உள்ள அனைவரும் இணைந்து விளையாடிய “தாயக்கரம்” என்னும் விளையாட்டு.

பறக்கும் வண்ணத்துப் பட்டாம்பூச்சிகளை தென்னைமர ஓலைகளால் அடித்துப் பிடித்து, கண்ணாடிக் கூண்டில் போட்டு விளையாடும் “பட்டான்” விளையாட்டு.

இரு கொம்பினைக் கொண்ட பூச்சிக்கு, ‘மாட்டுப்பூச்சி’ என பெயரிட்டு, அதனைப் பிடித்துச் சேகரிக்கும் “மாட்டுப்பூச்சி சேகரித்தல்” விளையாட்டு.

தேங்காய் மட்டைகளை இலகுவாக சீவி விளையாடிய “மட்டைப் பந்து” விளையாட்டு.

காய்ந்த சுரைக்காயை இடுப்பில் கட்டிக் கற்றுக் கொண்ட “நீச்சல்” விளையாட்டு.

சேகரித்த கற்களை ஒவ்வொன்றாக பதினான்கு குழியிலிட்டு விளையாடிய “பல்லாங்குழி” விளையாட்டு.

கயிற்றின் இரு முனைகளை மரத்தில் கட்டி, அதனில் அமர சாக்கிட்டு விளையாடிய “தூரி” விளையாட்டு.

ஆடு, மாடு, எருமை மேய்ச்சல் என்னும் பெயரில் மரமேறி குதூகலமடைந்த “மரமேறும்” விளையாட்டு.

இவ்வாறாக, பசியை மறந்து, விளையாடித் திரிந்த நாட்களே அதிகம்.

விடுமுறையின் இறுதி நாளில், அம்மாயி, தாத்தா, பெரியம்மா (நான் அம்மா என்றே இவளை அழைப்பேன்), மாமா, அத்தை ஆகியவர்களுக்கு முத்தமிட்டு, கண்ணீருடன், பிரிய மனமின்றி, மீண்டும் அடுத்த முழு ஆண்டு விடுமுறைப் பற்றிய ஏக்கத்தோடும், கனவுகளோடும் எங்கள் வீடு திரும்புவோம்.

எங்களது அனைத்து விளையாட்டிலும் உயிரோட்டமிருந்தது.

ஆனால், தற்கால சிறுவர்களின் விளையாட்டுகளோ மின்னணு கருவியிலேயே முடக்கப்பட்டுவிட்டது.

இன்று, ஒடி ஆடும் சிறுவர்களின் எண்ணிக்கையோ விரல் விட்டு எண்ணும் அளவே.

இயந்திர உலகமடா!!!!!!
-ஷாலினி ஈஸ்வரமூர்த்தி

Saturday, 9 April 2016

பொறுப்பு

பொறுப்பு


பொறுப்பாய் இரு என்றாள் அம்மா………….

என் சிறுவயதில்,

பொறுப்பாய் விளையாடி வீடு திரும்பு என்றாள்……     
     திரும்பியதோ இரத்தக் காயங்களோடு.
பொறுப்பாய் மிதிவண்டியை சாலையில் செலுத்திடு என்றாள்……………     
     அடைந்ததோ சிறு விபத்து.
பொறுப்பாய் பாடம் படி என்றாள்……..     
     எடுத்ததோ கடைசி மதிப்பெண்.
பொறுப்பாய் முதியோர்களை கவனிக்கச் சொன்னாள்……………..     
     அவர்கள் கவனித்ததோ என்னை.
பொறுப்பாய் வீட்டு வேலைகளை செய்யச் சொன்னாள்…………………     
     என் கைகள் சந்தித்ததோ சிறு காயம்.
பொறுப்பாய் வீட்டைப் பெருக்கு என்றாள்……………..     
     குப்பைகளின் எண்ணிக்கை குறைந்ததோ பத்து சதவிகிதம் மட்டுமே.

என் முதுகலைப் பட்டம் முடித்த பிறகு,     

   ஒரு உதவிப் பேராசிரியராக பொறுப்பேற்றேன்,     
   எழுபத்தொன்று குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு என்னை அடைந்தது,     
   ”பொறுப்பாய் இரு” என்று என் அன்னை கூறிய வார்தையை உணர்ந்தேனொரு அன்னையாக என் எழுபத்தொன்று குழந்தைகளுக்கு.......
                                             ----------------ஷாலினி ஈஸ்வரமூர்த்தி

Wednesday, 23 March 2016

அம்மா
அம்மா
"அம்மா" என் முதல் அழகோவியம் நீ

என் உதடுகள் உச்சரித்த முதல் சொல் "அம்மா"

என் கைகள் எழுதிய முதல் வார்த்தை "அம்மா"

என் தடுக்கிய  கால்களுக்கு உதடுகள் கூறிய ஆறுதல் வார்த்தை "அம்மா"

அழகின் பொருளை என் கண்களுக்கு உணர்தியது உன் முகம்

நான் கட்டி அழகு பார்த்த முதல் சேலை உன் சேலை

உன் இரு கால்களின் வாயிலாக நீ எனக்குச் செய்த சேவையைச் செய்வேன் நான் உனக்கோர் அம்மாவாக நீ மூன்று கால்களை அடையும் வேளை……….. "அம்மா"


                                                            --------ஷாலினி ஈஸ்வரமூர்த்தி

Monday, 21 March 2016